×

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்ெகாண்டனர். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஸ்குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா, சென்னை உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் டாக்டர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில்,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஸ்குமார் பேசியதாவது: தமிழ்நாடு அரசு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 01.01.2019 முதல் தடை செய்துள்ளது.

அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, நீலகிரி மாவட்ட எல்லையிள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்படுவதை கண்காணித்து முற்றிலும் தடை செய்யவேண்டும், நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து மாவட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத வண்ணம் கண்காணிக்க வேண்டும்.

சோதனைகள் தீவிரபடுத்த வேண்டும். குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துதல் மற்றும் பொது இடங்களில் வீசுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார். முன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஸ்குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சித்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கேட்டறிந்தார்கள்.

பின்னர், ஊட்டி நகராட்சி, தீட்டுக்கல் உரக்கிடங்கினை நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு மேற்கொண்டு, நாள்தோறும் சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக், துணிகள் ஆகிய குப்பைகளை உடனுக்குடன் இயந்திரத்தின் மூலம் துண்டுகளாக்கி மறுசுழற்சிக்கு கொண்டு வருமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். கிளன்மார்கன் பகுதியில், வனத்துறையின் சார்பில், அந்நிய களைச் செடிகளான சீகை மற்றும் கற்பூர மரங்களை அகற்றி, சோலை மரங்கள் மற்றும் புல்வெளிகள் உருவாக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், மாவட்ட வன அலுவலர் கௌதம், கள இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) வெங்கடேஷ், துணை இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பம்) அருண்குமார், உதவி வன பாதுகாவலர் தேவராஜ், மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் மகராஜ், முகம்மது குதுரதுல்லா, பூஷணகுமார் (குன்னூர்), உதவி இயக்குநர் (பேருராட்சிகள்) இப்ராகிம்ஷா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் குழந்தைராஜ், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் உதவி பொறியாளர் சிந்தனை செல்வன், கூடலூர் நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், ஊட்டி நகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி, நகர்நல அலுவலர் ஸ்ரீதர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nilgiris District ,Madras High Court ,Ooty ,Nilgiri ,District ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...